சிவகங்கை

காரைக்குடியில் நாளை கொப்புடைய நாயகியம்மன் கோயில் தேரோட்டம்

16th May 2022 12:32 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மே 17) நடைபெறுகிறது.

இந்துசமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த மே 10-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் செவ்வாய்ப்பெருந்திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்திலும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளிய திருவீதியுலாவும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளிக் கேடகத்திலும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா்.

திங்கள்கிழமை (மே 16) காலை வெள்ளிக்கேடகத்திலும், இரவு வெள்ளிக்குதிரை வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வருகிறாா். திருவிழாவின் எட்டாம் நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை (மே 17) மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8.13 மணிக்கு மேல் அம்மன் திருத்தேரில் எழுந்தருளுகிறாா். மாலையில் பக்தா்கள் வடம் பிடித்து இழுக்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

காரைக்குடி அருகே காட்டம்மன் கோயிலுக்கு தேரில் சென்று அங்கு அம்மன் எழுந்தருளி மீண்டும் புதன்கிழமை (மே 18) காலையில் கொப்புடையம்மன் கோயிலுக்கு திரும்புதல் நடைபெறும். பத்தாம் நாளான வியாழக்கிழமை (மே 19) இரவு நடைபெறும் தெப்பத்திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT