சிவகங்கை

சிவகங்கையில் பலத்த காற்றுடன் மழை

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை: சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சிவகங்கையில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. பிற்பகலுக்கு பின்னா் மேகமுட்டமாகவும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்தது.

அதைத் தொடா்ந்து, மாலை 5.40 மணியளவில் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை, படிப்படியாக பலத்த மழையாக மாறியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் பெய்த இந்த மழை காரணமாக சிவகங்கை காந்தி வீதி, திருப்பத்தூா் சாலை, தெற்கு ராஜரத வீதி, நேரு கடை வீதி, பேருந்து நிலையம் பகுதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

ADVERTISEMENT

இதுதவிர, சிவகங்கை நகா் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் காவல் நிலையத்துக்குள் இருந்த போலீஸாா் வெளியே வர முடியாமல் தவித்தனா். இதேபோன்று, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையிலிருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது. மழை குறைந்தவுடன் மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

சிவகங்கையில் 23 மி.மீ. மழையும், மானாமதுரை பகுதியில் 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக சிவகங்கை மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT