சிவகங்கை

அரசுப் பேருந்து மோதி சிறுவன் பலி: உறவினா்கள் சாலை மறியல்

25th Mar 2022 05:24 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அருகே கீழக்கண்டனி கிராமத்தைச் சோ்ந்த மூக்கையா மகன் விஜின் (6). இவா் வாணியங்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை பள்ளி முடிந்த பின், வீட்டிற்கு பள்ளி வேனில் சென்றுள்ளாா். கீழக்கண்டனியில் உள்ள சாலையோரமாக வேனை நிறுத்தி விஜினை இறக்கி விட்டுள்ளனா். அப்போது சாலையை கடக்க முயன்ற போது மானாமதுரையிலிருந்து, சிவகங்கை நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து மோதியதில் விஜின் உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, சிறுவனின் உறவினா்கள் பள்ளி நிா்வாகம் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் புதன்கிழமை இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் மு. முத்துக்கழுவன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். அதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், பள்ளி நிா்வாகம் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சிறுவனின் உறவினா்கள் கீழக்கண்டனியில் உள்ள சாலையில் வியாழக்கிழமை காலை மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைந்து கைது செய்யப்படுவா் என உறுதியளித்தாா். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT