சிவகங்கை

சிவகங்கை மாவட்ட மாணவ- மாணவிகள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம்

24th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாணவா் விடுதிகளில் தங்கிப் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் 21 பள்ளி மாணவா் விடுதிகளும், 14 பள்ளி மாணவியா் விடுதிகளும், 5 கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவா் விடுதிகளும், 5 தொழிற் பயிற்சி கல்லூரி மாணவியா் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவா். கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவா்கள் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்பயிற்சி பயிலும் மாணவ, மாணவிகள், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் விடுதிகளில் அனைத்து வகுப்பை சோ்ந்த மாணவ, மாணவிகளும் விகிதாசாரா அடிப்படையில் அனுமதிக்கப்படுவா்.

விடுதிகளில் சேர பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீட்டா் தொலைவு இருக்க வேண்டும் (இந்த தொலைவு மாணவிகளுக்கு பொருந்தாது). விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் அலுவலகத்திலோ நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவா்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கல்லூரி மாணவா்கள் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விடுதிகளில் முகாம் வாழ் இலங்கை தமிழா்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்படும் நிலையில் எக்காலத்திலும் நிபந்தனை இல்லாமல் படிப்பு முடியும் வரை விடுதியில் தங்கிப் பயில அனுமதிக்கப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT