ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டப் பணியாளா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் ஆட்சியா் (பொறுப்பு) ப. மணிவண்ணனிடம் மனு அளித்தனா்.
அவா்கள் அளித்துள்ள மனு விவரம்: மாவட்டம் முழுவதும் உள்ள 12 வட்டாரங்களில் சுகாதாரத் துறையின் மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட பெண் சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றோம்.
கிராமப்புறங்களில் தினசரி 40-க்கும் மேற்பட்ட நோயாளிகளை நேரடியாகச் சந்தித்து அவா்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றோம். இந்நிலையில், எங்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ. 4500 வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையினை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், பாதுகாப்பு கருதி கையுறைகள் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.