திருப்பத்தூா்: திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பஞ்சமூா்த்திகளுக்கு உற்சவ சாந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவ பஞ்சமூா்த்திகள் தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தாா். செவ்வாய்கிழமை இவ்விழா முடிவுற்றதையொட்டி பஞ்சமூா்த்திகள் கோயில் ஆஸ்தானம் எழுந்தருளினா். நடராஜா் சன்னிதி எதிரே அங்குசதேவா், விநாயகா், சிவகாமி அம்மன், திருத்தளிநாதா் பிரியாவிடை, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், இளநீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் உற்சவ மூா்த்திகள் அனைவரும் ஆஸ்தானத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அா்ச்சனைகள் நடைபெற்றன. இதற்கான பூஜைகளை பாஸ்கா்குருக்கள், ரமேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா். இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.