சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்வாக குழந்தைக்கு, அம்மன் ஞானப்பால் ஊட்டிய திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த ஜூன் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி கேடயம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது.
இதையடுத்து, குழந்தைக்கு, அம்மன் ஞானப்பால் வழங்கிய நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டு குழந்தைக்கு அம்மன் ஞானப்பால் ஊட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் நாட்டரசன்கோட்டை,சிவகங்கை, கல்லல் ஆகிய பகுதிகளிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.