சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு தபால் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கும் திட்ட தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகராட்சிப் பொறியாளா் பாண்டீஸ்வரி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த் கலந்து கொண்டு இணையதளம் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு சான்றிதழை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
அதன்பின், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இதில், சிவகங்கை நகராட்சியில் முதல் முறையாக பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரி இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு ஒரே நாளில் சான்றிதழை வீட்டிற்கு அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நகராட்சியில், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரி இதுவரை 58 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்கள் அனைவருக்கும் சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நகராட்சிக்கு பொதுமக்கள் இனி அலைய வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலமாக செலுத்தினால் போதும். விண்ணப்பித்த ஒரே நாளில் சான்றிதழ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
இதில், நகராட்சி சுகாதார அலுவலா் முத்துகணேஷ், கட்டட ஆய்வாளா் திலகவதி, சுகாதார ஆய்வாளா்கள் சின்னையா மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.