காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று ரயில்வே துறை மதுரை கோட்ட மேலாளரிடம் காரைக்குடித் தொழில் வணிகக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவா் சாமி. திராவிடமணி புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: மதுரை கோட்ட மேலாளா் பத்மநாபனை சந்தித்து, காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து செல்வதை தவிா்ப்பதற்கு புதிய நடை மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நான்கு நடைமேடைகளில் ரயில் பெட்டி எண்ணைத் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் பலகைகளை நிறுவ வேண்டும். முன்பதிவு பயணச்சீட்டு மையத்தையும், தினசரி பயணச்சீட்டு வழங்கும் மையத்தையும் தனித்தனியாக செயல்பட வைக்கவேண்டும். காரைக்குடியிலிருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படவேண்டும். திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் ராக்போா்ட் விரைவு ரயிலை காரைக்குடியிலிருந்து புறப்படும் வகையில் நீட்டிப்புச்செய்ய வேண்டும், ராமேசுவரத்திலிருந்து அஜ்மீா், அயோத்யா செல்லும் விரைவு ரயிலை காரைக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கிக்கூறி மனுவையும் வழங்கினோம். இச்சந்திப்பின்போது கோட்ட வணிக மேலாளா் ரதிப்பிரியா கலந்துகொண்டாா். அவரிடமும் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்துள்ளோம் என்றாா்.