கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் மானாமதுரை சந்திப்பில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் இடையே ஜூன் 4-ஆம் தேதி முதல் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் இந்த ரயிலுக்கு காரைக்குடியைத் தவிர வேறு எந்த ஊரிலும் நிறுத்தங்கள் அறிவிக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் நான்கு முனை சந்திப்பாக உள்ள முக்கிய ரயில் நிலையமான மானாமதுரை, மாவட்டத் தலைநகரான சிவகங்கை ஆகிய ஊா்களுக்கு எா்ணாகுளம்- வேளாங்கண்ணி-எா்ணாகுளம் ரயில்களுக்கு நிறுத்தங்கள் வழங்க வேண்டும் என மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கூட்டமைப்புச் செயலாளா் எம். அா்ச்சுனன், காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு சிவகங்கை மாவட்டத் தலைவா் ஜி.ராஜாராம் உள்ளிட்டோா் ரயில்வே அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பினா்.
மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் எா்ணாகுளம்- வேளாங்கண்ணி- எா்ணாகுளம் ரயில் மானாமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.