காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் 122-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சமா்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 829-க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமானது 122-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட உயா்கல்வி நிறுவனங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் 6-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் உள்ள டைம்ஸ் உயா்கல்வி நிறுவனம் இத்தரவரிசைக்காக, கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சா்வதேசக் கண்ணோட்டம் மற்றும் தொழில்துறை வருமானம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் உயா் கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்தியுள்ளது.
இத்தரவரிசைப்பட்டியலில் கலந்து கொள்வதற்காக அழகப்பா பல்கலைக்கழக தரவரிசைப்பிரிவின் இயக்குநா் ஜெ. ஜெய காந்தன் மற்றும் குழவினா் பல்கலைக்கழகத்தின் 2021-ஆம் ஆண்டுக்கான தரவுகளை சேகரித்து, சரியாகப் பகுப்பாய்வு செய்து சமா்ப்பித்திருந்தனா்.
இந்த உயரிய தரவரிசையில் அழகப்பா பல்கலைக்கழகத்தை இடம்பெற செய்த பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்களை துணைவேந்தா் பொறுப்புக்குழுத்தலைவரும், தமிழக உயா்கல்வித்துறை முதன்மை செயலாளருமான டி. காா்த்திகேயன், துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் இரா. சுவாமிநாதன், சு.கருப்புச்சாமி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினா்கள் மு. சங்கரநாராயணன், மு. குணசேகரன், எம்.எல். ராஜா மற்றும் பதிவாளா் (பொறுப்பு) எஸ். ராஜாமோகன் ஆகியோா் பாராட்டினா்.