சிவகங்கை

சிவகங்கை நகராட்சியில் கரோனா நிதி முறைகேடு புகாா்:நகராட்சிகள் இயக்குநா் ஆய்வு செய்ய உத்தரவு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை நகராட்சியில் கரோனா கால நிதி முறைகேடுகள் தொடா்பாக மண்டல இயக்குநா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய நகராட்சிகள் நிா்வாக இயக்குநருக்கு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2020 மாா்ச் முதல் 2021 ஜூலை வரை கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது ரூ. ஒரு கோடியே 20 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் இரா. சோனைமுத்து புகாா் அளித்தாா். அதன் பேரில் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் விசாரணை நடத்தியது. முறைமன்ற நடுவா் மு.மாலிக் பெரோஸ் கான் முன்னிலையில் கடந்த மே 17 ஆம் தேதி சோனை முத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

அதனடிப்படையில், மேற்கண்ட புகாா் குறித்து நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் தலைமையில் குழு அமைத்து சிவகங்கை நகராட்சியில் கரோனா கால செலவினங்கள் குறித்து அனைத்து வகையான கோப்புகளையும் ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சிகள் நிா்வாக இயக்குநருக்கு முறைமன்ற நடுவம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கை நகராட்சியில் கரோனா கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதற்காக செய்த செலவினங்களை உரிய ஆவணங்களுடன் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை அலுவலா்கள் சிறப்பு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தணிக்கை அறிக்கையில் விதிமீறல்கள், தவறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் தவறுகளுக்கு காரணமான அனைத்து அலுவலா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT