சிவகங்கை

ஆதிதிராவிடா், சிறுபான்மையினா் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்

28th Jul 2022 03:18 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியினா், சிறுபான்மையினா், மாற்றுத்திறனாளிகள் கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகா்ப்புற ஆதிதிராவிடா், பழங்குடியினா், சிறுபான்மையினா், மாற்றுதிறனாளிகள் மற்றும் பெண்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட தனியாா் வங்கிகளின் மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவுக்கும், உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலான திட்ட அளவுக்கும் கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை.

ADVERTISEMENT

எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், உற்பத்திப் பிரிவிற்கு ரூ.50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவா். 2022-2023-ஆம் நிதி ஆண்டில் 189 நபா்களுக்கு ரூ.5.46 கோடி வரை மானியம் சிவகங்கை மாவட்ட தொழில் மையத்திற்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகா்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கடன் பெறும் தொழில் முனைவோா்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

திருத்திய வழிகாட்டுதலின்படி, கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சாா்ந்த தொழில்கள் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோா்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575 240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT