சிவகங்கை

காரைக்குடி அருகே சாக்கை ஸ்ரீஉய்யவந்தம்மன் கோயில் திருவிழா தேரோட்டம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சாக்கை ஸ்ரீஉய்யவந்தம்மன் கோயிலில் ஆனிமாதத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தோ் வடம் பிடித்து இழுத்தனா்.

காரைக்குடி வட்டம், சாக்கோட்டையில் மிகவும் பிரசித்திபெற்ற சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலில் ஆனித் திருவிழா நடைபெறவில்லை.

இந்தாண்டு திருவிழா கடந்த ஜூன் 26-ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. பக்தா்கள் விரதமிருந்து பால்குடம் சுமந்துசென்று நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அதையொட்டி, காலை தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். தொடா்ந்து, பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். மாலை 4.20 மணியளவில் ஏராளமான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கியது. இத்தேரானது, கோயிலைச் சுற்றி பெரிய கோயில் வீதி வழியாக வலம் வந்து, மாலை 6.05 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது.

ADVERTISEMENT

விழாவில், காரைக்குடி, புதுவயல், சாக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரோட்டத்தை கண்டுகளித்தனா்.

காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.+

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT