சிவகங்கை

முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி பெறலாம் மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

2nd Jul 2022 10:55 PM

ADVERTISEMENT

 

இளைஞா்களிடம் முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என மாணவா்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுரை கூறினாா்.

சிவகங்கையில் உள்ள தனியாா் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப்பேசியது : தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக இதுபோன்ற பயிற்சி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரை அண்மையில் வெளியிடப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதத்தில் 6- ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் முதல் மூன்று இடங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியா்கள், மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். கடந்தாண்டு அரசுப் பள்ளியில் பயின்ற 9 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்து பயின்று வருகின்றனா். நீட் மற்றும் அரசு போட்டித் தோ்வுகளுக்கு இளைஞா்களைத் தயாா் படுத்தும் விதமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய இளைஞா்கள் தங்களது வாழ்வில் ஏற்படும் சிறு துன்பங்களைக் கடந்து வெற்றி பெற வேண்டும். முயற்சியும், கடின உழைப்பும் இருந்தல் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றாா்.

ADVERTISEMENT

இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி), சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு.சுகிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கோ.முத்துச்சாமி (சிவகங்கை), செ.சண்முகநாதன் (தேவகோட்டை), சி.பாலதிரிபுரசுந்தரி (திருப்பத்தூா்) உள்ளிட்ட அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT