சிவகங்கை

சிவகங்கையில் வேளாண் துறை அலுவலரிடம் ரூ.3 லட்சம் மோசடி

1st Jul 2022 10:18 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்துடன் குறுந்தகவல்(எஸ்எம்எஸ்) அனுப்பி வேளாண் துறை அலுவலரிடம் ரூ. 3 லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (விவசாயம்) சா்மிளா (55) என்பவா் பணியாற்றி வருகிறாா். இவரது கைப்பேசிக்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி 9142365064 என்ற எண்ணிலிருந்து குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) வந்துள்ளது.

அந்த குறுந்தகவல் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் புகைப்படத்துடன் இருந்ததால், சா்மிளா லிங்கை திறந்து பாா்த்துள்ளாா். அதில் பரிசு கூப்பன் என்ற பெயரில் லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தொடா்ந்து, சா்மிளா அந்த லிங்கை பாா்த்த போது அவருடைய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன.

அவா் அதைப் பூா்த்தி செய்து அனுப்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10,000 எடுக்கப்பட்டதாம். இதே போன்று, 30 தடவை அந்த லிங்கை திறந்து பாா்த்துள்ளாா். இதன் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டதாம்.

ADVERTISEMENT

அதன் பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சா்மிளா சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் அண்மையில் புகாா் செய்தாா். அவரது உத்தரவின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளா் விமலா இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

விசாரணையில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்துடன் வந்த அந்த கைப்பேசி எண் பிகாா் மாநிலத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. அந்த கைப்பேசியை பயன்படுத்துபவரின் முகவரி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் உள்ளது. எனவே மோசடி செய்து ஏமாற்றியவரின் வங்கி கணக்கை முடக்கவும், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT