சிவகங்கை

தேவகோட்டை அருகே மனைவி அடித்துக் கொலை: கணவா் காவல் நிலையத்தில் சரண்

26th Jan 2022 09:49 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவா் திருவேகம்பத்தூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

காளையாா்கோவில் அருகே உள்ள முடிக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் வீராச்சாமி (43). இவருக்கும், கோவிலாம்பட்டியைச் சோ்ந்த அழகப்பன் மகள் அன்னலெட்சுமி (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு தயாநிதி (12), வித்திஷ் (7) என இரண்டு மகன்கள் உள்ளனா்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அன்னலெட்சுமி முடிக்கரை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் என்பவருடன் தலைமறைவாகியுள்ளாா். இதையடுத்து, வீராச்சாமி கோவிலாம்பட்டியில் தனது மகன்களுடன் மாமனாா் அழகப்பன் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அன்னலெட்சுமி தனது தந்தையின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்து, தனக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது, வீராச்சாமிக்கும், அன்னலெட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி தனது மனைவி அன்னலெட்சுமியை மண்வெட்டியால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, வீராச்சாமி மண்வெட்டியுடன் திருவேகம்பத்தூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT