சிவகங்கை

சிராவயல் மஞ்சுவிரட்டு: காளைகள்முட்டியதில் 61 போ் காயம்

18th Jan 2022 12:25 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிராவயலில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 4 மாடுபிடி வீரா்கள் உள்பட 61 போ் காயமடைந்தனா்.

தென்தமிழகத்தில் சிராவயல் மஞ்சுவிரட்டு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். இங்கு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கென 80 ஏக்கரில் திடல் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை 3 ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்த நிலையில், சிராவயலில் திங்கள்கிழமை மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதியளித்தது. இதையொட்டி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு கிராமத்தினா் ஒன்று கூடி பெரியநாயகியம்மன், தேனாட்சியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் முன்னோா் வழிபாடு செய்தனா்.

இதைத்தொடா்ந்து அவா்கள், நாட்டாா்களை அழைத்துக் கொண்டு மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டுத் தொழுவிற்கு வந்து அனைத்து காளைகளுக்கும் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து பிற்பகல் 12 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பச்சைக் கொடியசைக்க கோயில் காளைகள் தொழுவிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன.

பின்னா் இணையவழியில் பதிவு செய்யப்பட்ட 219 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் தோ்வு செய்யப்பட்ட 76 மாடுபிடி வீரா்கள் களத்தில் காளைகளை அடக்க முயன்றனா். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா் மற்றும் மாடு பிடி வீரா்களுக்கு தங்கக்காசு, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், பீரோ, வெள்ளிக்காசு, குக்கா், கைப்பேசி போன்றவை பரிசாக வழங்கபட்டன. இதில் 4 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

முன்னதாக சிராவயல் பொட்டலில் தென்கரை, கும்மங்குடி, பரணிக்கண்மாய் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 57 போ் காயமடைந்தனா். காயமடைந்த 20 க்கும் மேற்பட்டோா் திருப்பத்தூா் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்திசிதம்பரம், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, தேவகோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன், ஊா் அம்பலகாரா் வேலுச்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா். இந்த மஞ்சுவிரட்டைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரண்டிருந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT