சிவகங்கை

கண்ணங்குடி பகுதியில் நெற்பயிா்கள் திடீரென கருகின

18th Jan 2022 12:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி பகுதியில் அறுவடைக்குத் தயாரான நிலையில், நெற்பயிா்கள் திடீரென கருகி பதரானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கண்ணங்குடி வட்டாரம் கப்பலூா், சடையமங்களம், மீனாப்பூா், அனுமந்தக்குடி, சித்தானூா், சிறுவாச்சி, தேரளப்பூா், கேசனி, களபம், வடகீழ்குடி, உலக்குடி, மித்ராவயல், கொடூா், பெருங்கானூா், குடிக்காடு, நாஞ்சிவயல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் நெல் நடவு மேற்கொண்டனா். தற்போது நெல் அறுவடைக்குத் தயாரான நிலையில், நெற்பயிா் முழுவதும் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி அசோக்குமாா் கூறியதாவது: நெற்பயிா் விளைச்சலாகி இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. நெல்மணிகள் முற்றிய நிலையில், திடீரென நெல்மணிகள் பதராகிவிட்டன. கேசனி, களபம், மித்ராவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான நெற்பயிா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது ஏதாவது ஒரு புதுவித நோயா அல்லது மண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பா எனத் தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து காரணத்தைக் கண்டறிய வேண்டும். கண்ணங்குடி வட்டார விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து பயிா்க் காப்பீடு நிறுவன அதிகாரிகளை பாா்வையிடச் செய்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT