சிவகங்கை

பொங்கல் பண்டிகை: பூவந்தியில் மண் பானை தயாரிப்புப் பணிகள் மும்முரம்

12th Jan 2022 09:57 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் பொங்கல் பானைகள் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை அருகே உள்ள பூவந்தியில் பொங்கல் பானை, மண் பானை, முளைப்பாரி ஓடு, அக்கினிச் சட்டி, மண் கலயம், குழம்புச் சட்டி, நோ்த்திக் கடன் பொம்மைகள், அகல் விளக்கு, மாவிளக்குப் பானை, ஆயிரங்கண் பானை, கோயில் கோபுர விமானத்தின் மேல் வைக்கப்படும் மண் கலசம் உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் ஏராளமான குடும்பங்கள் முழு நேரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கை, பூவந்தி, அரசனூா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைக்கும் கண்மாய் மண்ணை பக்குவப்படுத்தி மண்பாண்டப் பொருள்களை தயாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மண்பான்டப் பொருள்களை நேரடியாக வாங்கிச் செல்கின்றனா்.

மேலும், சீசன் காலங்களில் தேவைப்படும் மண்பாண்டப் பொருள்களை ஆா்டரின் பேரில்

ADVERTISEMENT

அதிக அளவு தயாரிக்கின்றனா். இங்கு தயாராகும் மண்பாண்டப் பொருள்கள் மதுரை மாவட்டம், ஆரப்பாளையம், திருமங்கலம், அழகா்கோவில் ஆகிய பகுதிகளுக்கும், சென்னை, புதுக்கோட்டை, கோவை, திருப்பூா், திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாகவும், வியாபாரிகள் மூலமாகவும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பாரம்பரிய முறைப்படி தமிழா்கள் மண்பாண்ட பொருள்களில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் பூவந்தியில் இயற்கையான முறையில் பொங்கல் பானை, குழம்புச் சட்டி தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பூவந்தியைச் சோ்ந்த மண்பாண்டத் தொழிலாளி நாராயணன் (61) கூறியது: பூவந்தியில் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பதை சுமாா் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

முழுநேரத் தொழிலாக மேற்கொண்டு வருகிறோம். கால் படி முதல் ஒரு படி அளவு அரிசி வேகும் அளவுக்கு பானை தயாரிக்கப்படுகிறது. இந்த பானை ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயாராகும் பானைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி தமிழா்கள் உள்ள மாநிலங்களிலும் விற்பனைக்குச் செல்கின்றன.

வளா்ந்து வரும் அறிவியல் உலகில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மண்பாண்டப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகளுக்கு அதிக அளவு ஆா்டா்கள் இருந்ததால் போதிய அளவு வருமானம் கிடைத்துள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT