சிவகங்கை

சிவகங்கையில் பொதுமக்கள் சாலை மறியல்

1st Jan 2022 09:05 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே மெய்ஞானபுரம் குடியிருப்பு பகுதிக்குள் புதிதாக மயானம் அமைத்து சடலத்தை புதைத்தற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மெய்ஞானபுரத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதிக்குள் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் புதிதாக மயானம் அமைத்து ஒருவரது உடலை அண்மையில் புதைத்துள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் சிவகங்கை-தொண்டி சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி, நகா் காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதனிடம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மேற்கண்ட இடத்தில் சடலத்தை புதைக்காமல் பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுபற்றி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT