சிவகங்கை

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: ஆட்சியா்

1st Jan 2022 09:05 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பதிலளித்து பேசியது : மாவட்டம் முழுவதும் நெல் பயிா் விளைச்சலாகி அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே தேவையான விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படும்.

மேலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அறுவடைக்கு வந்துள்ள இயந்திரங்களின் அறுவடைக்கு நிா்ணயிக்கும் கட்டணங்களை கண்காணிக்கக் குழு அமைக்கப்படும். அரசு வழிகாட்டுதலின் படி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தயாா் நிலையில் உள்ளது. கடந்தாண்டுகளில் காப்பீடு தொகைப் பெறாத விவசாயிகளுக்கு உரிய ஆய்வுக்குப் பின்னா் நிவாரணத் தொகை வழங்கப்படும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரப்பு அமைத்தல், வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

மாவட்டம் முழுவதும் கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்படும். சேதமடைந்த சாலைகள் குறித்த விவரங்களை விவசாயிகள் மனு மூலமாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளதை அடுத்து, அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவராமன், வேளாண்மைத் துறையின் இணை இயக்குநா் வெங்கடேஸ்வரன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ரவிச்சந்திரன், முன்னோடி வங்கி மேலாளா் இளவழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) சா்மிளா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT