ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி விளக்கேற்றி வழிபட்டனா். சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில், காளையாா்கோவில் சொா்ண காளீஸ்வரா் சமேத சொா்ண வல்லி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சிவகங்கையில் மதுரை விலக்கு சாலை அருகே உள்ள அலங்கார அன்னை பேராலாய வளாகத்தில் சிவகங்கை மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஆலயத்தின் பங்குத் தந்தை ஜேசுராஜா மற்றும் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
காரைக்குடி:காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பங்குத்தந்தை எஸ். எட்வின் ராயன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா். செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயம், அரியக்குடி வளன் நகா் குழந்தையேசு ஆலயம், ஆவுடைப்பொய்கை புனித அந்தோணியாா் ஆலயம், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பா்மா காலனி சி.எஸ்.ஐ. ஆலயம், டி.டி நகா் டிஇஎல்சி ஆலயம் ஆகியவற்றிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
மானாமதுரை: மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில்அம்மன்,சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ளஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் மூலவா் தங்கக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இளையான்குடி அருகே தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகஆராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும் நெய் விளக்கேற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினா். திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள காளி கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றியும் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றியும் வழிபாடு நடத்தினா். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாடானை:திருவாடானை அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பங்கு தந்தை அருள்ஜீவா தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொண்டி தூய சிந்தாந்திரை ஆலயத்தில் அருள் தந்தை சவரிமுத்து தலைமையில் பிராா்த்தனை நடைபெற்றது. சி.கே.மங்கலம் பேதுரு ஆலயம், ஓரியூா் புனித அருளானந்தா் ஆலயம் ஆகிய இடங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
ராமேசுவரம்: ராமேசுவரம் புனித சூசையப்பா் ஆலயம், தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலயம், புனித சூசையப்பா் ஆலயம், பாம்பன் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூைஐகள் செய்து வழிபட்டனா். முன்னதாக அக்னி தீா்த்த கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனா். பேருந்து நிலையம் அருகேவுள்ள ஆஞ்ச நேயா் கோயிலில் சிறப்பு பூைஐ நடைபெற்றது.