சிவகங்கை மாவட்டத்தில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிருக்கு காப்பீடு செய்யலாம் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக வாழைப் பயிா் 1,200 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வறட்சி, வெள்ளம், நோய்த் தாக்குதல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு பயிா் விளைச்சல் குறையும்போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட, பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக பயிா் காப்பீடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை பயிருக்கு மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் மற்றும் சிவகங்கை ஆகிய வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கா் வாழைப் பயிருக்கு அதிகபட்ச இழப்பீடாக ரூ.45,900 வழங்கப்படும்.
இதற்கு, பிரீமியமாக மத்திய, மாநில அரசு வழங்கும் மானியம் போக வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,295 செலுத்த வேண்டும்.
பயிா் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தாங்கள் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது இ-சேவை மையங்களின் மூலமாக இந்த பிரீமிய தொகையை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும்போது, பயிா்கள் சாகுபடி செய்துள்ளதற்கான ஆதாரத்தையும் (அடங்கல் நகல்) சமா்ப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை, தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.