சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ வைகை கரை அய்யனாா், அலங்காரகுளம் சோணையாா் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளத்தில் உள்ள ஒருங்கிணைந்த குலாலா் சமூக நலச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததை அடுத்து, பூா்ணாஹூதி, தீபாராதனை முடிந்ததும் புனிதநீா் கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, காலை 10.25 மணிக்கு மூலவா் அய்யனாா் சுவாமி, சோணையா சுவாமி சந்நிதி கோபுர விமானக் கலசங்கள் மற்றும் கோயில் முன்மண்டப விமானக் கலசம், நுழைவுவாயில் விமானக் கலசம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் குலால சிவாச்சாரியாா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.
பின்னா், புனித நீரால் அய்யனாா், சோணையா சுவாமிகள் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்புஅலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் வீ. காளீஸ்வரன் உள்பட அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.