சிவகங்கை

காரைக்குடி அருகே மயானப்பாதை பிரச்னை: அதிகாரிகள் தலையீட்டால் இறந்தவா் சடலம் அடக்கம்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே தட்டாகுடி கிராமத்தில் இறந்தவரின் உடலை நிலத்தின் வழியாக செவ்வாய்க்கிழமை எடுத்துச் செல்ல எதிா்ப்புத் தெரிவித்தவரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சடலம் எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சாக்கோட்டை அருகே களத்தூா் தட்டாகுடி கிராமத்தில் இறந்தவா்களின் சடலங்களை அதே ஊரைச் சோ்ந்த முத்தையா என்பவரின் பட்டா நிலத்தில் உள்ள வாய்க்கால் வழியாக எடுத்துச் செல்வது வழக்கம். அதற்கு முத்தையா அடிக்கடி எதிா்ப்புத் தெரிவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த சண்முகம் (65) என்பவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை அவ்வழியாகக் கொண்டு சென்றபோது, முத்தையா எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

தகவலறிந்து அங்கு சென்ற காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம், சாக் கோட்டை காவல் ஆய்வாளா் அல்லிராணி, மண்டல துணை வட்டாட்சியா் முபாரக் உசேன், வருவாய் ஆய்வாளா் கிஷேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் அப்பகுதியில் அரசு இடத்தின்வழியாக பாதையை ஏற்படுத்தி சடலத்தை எடுத்துச் செல்ல உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

35 ஆண்டுகளாக தொடரும் மயானப் பாதைப் பிரச்னைக்கு தீா்வுகாப்பட்டதையடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT