சிவகங்கை

மானாமதுரை அருகே காா்-அரசுப் பேருந்து மோதல்: தம்பதி பலி

2nd Feb 2022 09:30 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், காரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனா்.

காளையாா்கோயில் அருகே மறவமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரகாளை (46). இவரது மனைவி கவிதா (42). இவா்களது மகள் கோயம்புத்தூா் வேளாண் கல்லூரியில் படித்து வருகிறாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, தனது மகளை மதுரைக்கு காரில் அழைத்துச் சென்று கோயம்புத்தூா் பேருந்தில் ஏற்றிவிட்டு, கணவன்-மனைவி இருவரும் மீண்டும் காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி காவல் சரகம் சித்தாலங்குடி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, காரும் சிவகங்கையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்திலேயே கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனா். காா் முற்றிலும் உருக்குலைந்தது.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பூவந்தி போலீஸாா், சடலங்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT