சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள 285 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு வரும் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள தோ்தலில் 2084 போ் தோ்தல் அலுவலா்களாகப் பணியாற்ற உள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, சிவகங்கை 27, காரைக்குடி-36, தேவகோட்டை-27, மானாமதுரை-27 (புதிதாக உருவாக்கப்பட்டது) ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 117 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.
இதேபோன்று, நாட்டரசன்கோட்டை-12, இளையான்குடி-18, கானாடுகாத்தான்-12, கண்டனூா்-15, கோட்டையூா்-15, நெற்குப்பை-12, பள்ளத்தூா்-15, புதுவயல்-15, சிங்கம்புணரி-18, திருப்புவனம்-18, திருப்பத்தூா்-18 ஆகிய 11 பேரூராட்சிகளில் உள்ள 168 பதவியிடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 285 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.
இத்தோ்தலுக்காக மேற்கண்ட பகுதிகளில் 431 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் மண்டல அலுவலா், உதவி மண்டல அலுவலா், உதவியாளா், வாக்குச் சாவடி தலைமை அலுவலா், வாக்குச் சாவடி நிலைய அலுவலா் என்பன உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2084 அரசு அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா்.