சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திங்கள்கிழமை உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.58 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
திருப்புவனம் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியா் ராஜரத்தினம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்புவனத்தில் அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை அருகே வாகனச் சோதனை நடத்தினா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 1.58 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அது நிதி நிறுவனம் மூலம் கிராமப்புறங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் வசூலித்த பணம் என்பது தெரிந்தது. ஆனால் உரிய ஆவணமின்றி அந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டதால் பறக்கும் படையினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து திருப்புவனம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.