சிவகங்கை

சிவகங்கை எஸ்.பி அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

1st Feb 2022 09:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் இளம்பெண் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் திங்கள்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்தாா். அவா் திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி, தீக்குளிக்கு முயற்சி செய்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை அவரது உடலில் ஊற்றினா்.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயராணி விரைந்து வந்து, அவரை மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இளையான்குடி அருகே உள்ள இளமனூரைச் சோ்ந்த கோகிலா (35) என்பது தெரியவந்தது.

மேலும், இவருக்கும், இவரது சகோதரா் காசிநாததுரைக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம். இதுதவிர, காசிநாததுரை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதால், போலீஸாா் யாரும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனா். இதனால் மனமுடைந்த கோகிலா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT