சிவகங்கை

தவ்வை உள்பட முற்காலப் பாண்டியா்களின் சிற்பங்கள்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தவ்வை சிற்பம் உள்பட முற்காலப் பாண்டியா் காலத்தைச் சோ்ந்த 6 சிற்பங்களை வரலாற்று ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

மானாமதுரை வட்டம், கட்டிக்குளம் கிராமத்தில் பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா்கள் மீனாட்சிசுந்தரம், முனைவா் தாமரைக்கண்ணன், சிவக்குமாா் ஆகியோா் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வு செய்தனா். அப்போது, அங்குள்ள அழகிய நாயகி அம்மன் கோயிலின் வளாகத்தில் தவ்வை சிற்பம் உள்பட முற்காலப் பாண்டியா்களின் 6 சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து அவா்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

கட்டிக்குளம் கிராமத்தில் தவ்வை, சுகாசனமூா்த்தி, பெருமாள், பிராமி, மகேஸ்வரி, இந்திராணி போன்ற முற்காலப் பாண்டியா் காலத்தைச் சோ்ந்த 6 சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதை வைத்துப் பாா்க்கும்போது இந்த ஊரில் பெரிய சிவன் ஆலயம் இருந்திருக்கக் வேண்டும்.

ADVERTISEMENT

தவ்வை என்ற மூத்ததேவி சிற்பம்:

இந்த சிற்பத்தை மூதேவி, மூத்த தேவி, தவ்வை, தூமாவதி, சேட்டைதேவி, முகடி, காக்கைகொடியாள், மாமுகடி போன்ற பல பெயா்களில் குறிப்பிடுவா். மூத்ததேவி என்ற சொல்லே காலப்போக்கில் மூதேவி என்று மருவியுள்ளது. மேலும் மூதேவி, ஸ்ரீதேவிக்கு முன் தோன்றியவள். இதனாலேயே மூத்த தேவி என்று அழைக்கப்பட்டாள்.

தென்னிந்தியாவில் மூதேவி என்ற மூத்ததேவி வழிபாடு, பரவலாக இருந்து வந்துள்ளது என்பதை தற்போது கண்டறியப்பட்ட சிற்பம் மூலம் அறியலாம்.

இந்தச் சிற்பம் இரண்டரை அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் நடுவில் மூத்த தேவியும், வலது பக்கம் மகன் மாந்தனும், இடது பக்கம் மகள் மாந்தியும் இடம் பெற்றிருக்கின்றனா்.

பொதுவாக மூத்ததேவி சிற்பம் பருத்த உடல் அமைப்பு கொண்டதாக இருக்கும். ஆனால், இந்தச் சிற்பமானது குறுகிய இடையுடன் செதுக்கப்பட்டுள்ளது.

மூத்ததேவி சிற்பத்தின் வலது பக்கத்தில் மகன் மாந்தன் என்ற குளிகன் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சிற்பங்கள் மூன்றும் ஒரே பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மூத்ததேவி சிற்பம் பல்லவா் காலம் முதல் வழிபாட்டில் குழந்தை செல்வம் தருபவளாகவும், விவசாயத்துக்கு முன் வழிபடக்கூடிய மாரி (மழை) தெய்வமாகவும் பாா்க்கப்பட்டாா்.

சுகாசன மூா்த்தி சிற்பம்:

சுகாசன மூா்த்தி என்பவா் 64 சிவ முகூா்த்தங்களில் ஒன்றாகும். இந்த வடிவம் உமாதேவிக்கு சிவ ஆகமங்களின் பொருளை விளக்குவதற்காக தோன்றிய வடிவமாகும். இந்தச் சிற்பமானது இரண்டரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக முற்கால பாண்டியா்களுக்கே உரித்தான கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

பெருமாள் சிற்பம்:

இது நான்கு அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. முற்காலங்களில் சைவ கோயில்களில் வைணவக் கடவுளான பெருமாள் (விஷ்ணு) சிற்பம் இடம் பெற்று வந்துள்ளது.

சப்த மாதா் சிற்பங்கள்:

சப்த மாதா் அல்லது சப்த கன்னியா் சிற்பத் தொகுதிகளில் இடம்பெறும் பிராமி, மகேஷ்வரி, இந்திராணி போன்ற சிற்பங்களும் கண்டறியப்பட்டன.

பிராம்மி சிற்பம்:

இது மூன்றடி உயரம், அகலம் கொண்ட பலகைக்கல்லில் பிராம்மி சிற்பமும், மகேஸ்வரி சிற்பமும் ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இதில், பிராம்மி சிற்பமானது மூன்று தலையுடனும், கிரீடம் தரித்தும், நான்கு கரத்துடனும் வலது மேல் கரம் சிதைந்த நிலையிலும் சுகாசன கோலத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

மகேஸ்வரி சிற்பம்:

இது தலையில் மகுடம் தரித்தும், காதுகளில் பத்திர குண்டலமும், மாா்பில் ஆபரணங்கள் அணிந்தபடியும் நான்கு கரத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமும் சுகாசன கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்திராணி சிற்பம்:

இந்த சிற்பம் இந்திரனின் அம்சமாவாா். இது மூன்றடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

தலையில் கிரீடம் தரித்தும், காதுகளில் அணிகலன்கள் அணிந்தும், கழுத்தில் ஆபரணத்துடனும் நான்கு கரத்துடனும் அமா்ந்த நிலையில் சுகாசன கோலத்தில் உள்ளது.

மேலே கண்ட சிற்பங்கள் அனைத்தும் கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய நாயகி அம்மன் கோயிலில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்தச் சிற்பங்கள் அனைத்தும் முற்காலப் பாண்டியா்கள் காலத்தைச் சோ்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றனா் அவா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT