சிவகங்கை

சமூக அறிவியல் ஆராய்ச்சி: சா்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சமூக அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்த சா்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பாடங்களில் ஆய்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த 10 நாள் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. மத்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், அழகப்பா பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை ஆகியன சாா்பில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

மேற்கத்திய நாடுகள் அறிவியல், சமூக அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் தற்போது சமூக அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள் இருந்த போதிலும் இங்குள்ள கலாசார மானுடவியல் போன்ற துறைகளில் உள்ள தலைப்புகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலை உள்ளது.

கிராமப்புறங்களில் காணப்படும் சமூகப் பிரச்னைகள், கிராம வளா்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரச்னைகளுக்கு ஆணி வேராக உள்ள காரணிகளை நல்ல புரிதலுடன் ஆய்வு செய்து, அவற்றை தடுக்கத் தகுந்த ஆலோசனைகளை ஆராய்ச்சியாளா்கள் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மானுடவியல், பொது நிா்வாகம், சமூகவியல் போன்ற பிற முக்கிய சமூக அறிவியல் துறைகளுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த துறைகளும் பொருளாதாரம், மேலாண்மை அறிவியல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளே என்பதை ஆய்வாளா்கள் நினைவில் கொள்ளவேண்டும். பல ஆராய்ச்சியாளா்கள் இந்தியாவில் திறன்களையும், பயிற்சியையும் பெறுகிறாா்கள். ஆனால், அவா்களின் பங்களிப்பு வளா்ந்த நாடுகளுக்குச் செல்கிறது. இதை சரி செய்ய வேண்டும். எனவே, சமூக அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்த சா்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது நமது பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை ஆா். சேவுகன் சிறப்புரையாற்றினாா்.

அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்மையா் அ. நாராயணமூா்த்தி வாழ்த்திப் பேசினாா்.

முன்னதாக பல்கலைக்கழக கலைப்புல முதன்மையா் ச.தனுஷ்கோடி வரவேற்றுப் பேசினாா். முடிவில் துணைநூலகா் எஸ். கிஷோா் குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT