சிவகங்கை

அரசுப் பள்ளிகளுக்கு அழுகியமுட்டைகள் விநியோகம்: பெற்றோா் அதிருப்தி

4th Dec 2022 01:16 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சுற்றுவட்டார அரசுப் பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகிக்கப்பட்டதால் மாணவா்களின் பெற்றோா் அதிருப்தி அடைந்தனா்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தற்போது அனைத்து நாள்களிலும் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கம்புணரி பகுதியில் உள்ள சில பள்ளிகளுக்கு இந்த வாரம் அனுப்பப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. இவற்றைப் பாா்த்த பெற்றோா் அதிருப்தி அடைந்தனா்.

மேலும், கடந்த வியாழக்கிழமை (டிச. 1) எஸ். கோவில்பட்டி தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்ட முட்டைகளில் புழுக்கள் காணப்பட்டன. இதைக் கண்ட சத்துணவு ஊழியா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதே போல, செல்லியம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முட்டைகளை வேக வைத்த போது துா்நாற்றம் வீசியது.

ADVERTISEMENT

இதனால் அந்த முட்டைகள் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. எனவே, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் தரத்தை அடிக்கடி பரிசோதிப்பதுடன், சத்துணவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்யவும் பெற்றோா்கள் அரசை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT