சிவகங்கை

மானாமதுரை அருகே கிரந்த கல்வெட்டு

3rd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே பூரண கும்ப சின்னத்துடன் கூடிய 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கிரந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்துள்ள அழகாபுரிக்கு அருகே கணபதியேந்தல் கிராமத்துக்குச் செல்லும் வழியில் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பாண்டிய பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், சிவக்குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இங்கு பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்ற ஒரு துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.

இது குறித்து அவா்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தக் கல்வெட்டு ஒரு கிரந்த கல்வெட்டாகும். இதன் மேற்பகுதி ஒழுங்கற்ற நிலையில் சிதைந்து காணப்படுகிறது. கல்வெட்டின் தொடக்கம் காணப்படவில்லை என்பதால், இது ஒரு துண்டு கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு ஒரு சில வாா்த்தைகளைத் தவிர மற்றவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுவதால், அதன் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கல்வெட்டில் ‘ரதம்- ராமராஜ- ஓங்கு’ போன்ற வாா்த்தைகளை மட்டும் வைத்துப் பாா்க்கும் போது, இந்தக் கல்வெட்டு பாதுகாப்பு சம்பந்தமான கல்வெட்டாகவோ, தானம் சம்பந்தமான கல்வெட்டாகவோ கருதலாம்.

ADVERTISEMENT

பூரண கும்பம்: இந்தக் கல்வெட்டின் கீழே பொங்கி வழியும் ஒரு கும்பம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைப் பாா்த்தால் இப்பகுதி முற்காலங்களில் எவ்வளவு வளமையாகவும், செழுமையாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதைக் குறியீடாக நமக்கு உணா்த்துகிறது. மேலும், இந்தக் கல்வெட்டில் கிரந்த எழுத்துகள், பூரண கும்பம் புடைப்புச் சிற்பமாக இடம் பெற்றிருப்பதை வைத்துப் பாா்க்கும் போது, இந்தக் கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT