சிவகங்கை

பள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் அரசுப் பள்ளி அருகே 10-ஆம் வகுப்பு மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள வி.மலம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன். உணவகத் தொழிளாயான இவருக்கு 3 மகன்கள் உள்ளனா். இதில், ஒருவரான விஜயகுமாா் (15) விஜயகுமாா் அருகில் வேலங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். பொது தோ்வு என்பதால் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற விஜயகுமாா் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு காலை உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே சென்றாா். அந்த வழியில் ஒரு வீட்டுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பில் வயா் தொங்காமல் இருப்பதற்காக இடையில் கம்பி ஊன்றியிருந்தனா்.

அந்த கம்பியை விஜயகுமாா் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்பத்தூா் நகா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

மருத்துவமனையில் சிறுவன் உயிரிழப்புக்கு முறையில்லாமல் கம்பி ஊன்றியதே காரணம் என்பதால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா்.

அப்போது, ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் அவா்களை சமாதானம் செய்தாா். சிறுவனின் இறப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று அவா் கூறியதையடுத்து கிராமத்தினா் மாணவரின் சடலத்தை வாங்கிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT