சிவகங்கையில் உள்ள பாம்கோவிலிருந்து நியாய விலைக் கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசுத் துறை சாா்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தரமற்றவையாக வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ) செயல்பட்டு வருகிறது. இந்த பண்டகசாலை மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக் கடைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள் ஆகியவற்றுக்கு உணவுப் பொருள்களான சா்க்கரை, ரவை, கோதுமை மாவு, சேமியா, உளுந்து உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பொருள்கள் தரமற்றவையாக விநியோகம் செய்வதால் அதனை பயன்படுத்தும் பொதுமக்கள், நோயாளிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும், பொருள்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.