சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நிழல் இல்லாத நாள்

27th Aug 2022 11:03 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை நிழல் இல்லாத நாள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் சிவகங்கையில் உள்ள புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிழல் இல்லாத நாள் குறித்த செயல்பாட்டை அறிவியல் இயக்கத்தின் கௌரவத் தலைவா் சாஸ்தாசுந்தரம், ஒருங்கிணைப்பாளா் குழந்தை ஆரோக்கியமேரி ஆகியோா் விளக்கினா்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி செய்தியாளா்களிடம் கூறியது: ஒரு ஆண்டில் குறிப்பிட்ட 2 நாள்கள் மட்டும் நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது அதன் நிழலானது எந்தப் பக்கமும் செல்லாமல் நேராக இருக்கும்.

ADVERTISEMENT

அதாவது செங்குத்தாக நிற்கும் பொருளின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அதைத் தான் அறிவியலில் ‘நிழலில்லா நாள்’ அல்லது ’பூஜ்ஜிய நிழல் நாள்’ என்கின்றோம். தமிழகத்தைப் பொறுத்தவரை அந்நிகழ்வு ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் நிழல் இல்லாத நாளாக அமையும்.

அதேபோன்று, ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து செப்டம்பா் 1 ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் நிழல் இல்லா நாளாக இருக்கும். அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிழலில்லா நாளாக அமைந்திருந்தது.

தற்போது ஆக. 27 ஆம் தேதி நிழலில்லாத நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் சிவகங்கையில் உள்ள புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளி, காளையாா்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லல் அருகே கோவிலூரில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி, திருப்புவனத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நிழல் இல்லாத நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட்டனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT