சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நாட்டின் 76- ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த் தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நகராட்சி ஆணையா் பாஸ்கரன், துணைத் தலைவா் காா்கண்ணன், உறுப்பினா்கள், பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, சிவகங்கையில் உள்ள மன்னா் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ச.துரைஅரசன் தலைமை வகித்து,தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதுதவிர, அரசனூா் அருகே உள்ள பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் தலைவா் மலேசியா பாண்டியன் தலைமை வகித்து,தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன். மணிபாஸ்கரன் தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக விளையாட்டு மைதானம் அருகே இந்த அலுவலகம் இருந்ததால், ஏற்கெனவே அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு கொடியேற்றிய பின்னா் சுமாா் 11 மணிக்கு மேல் தான் இந்த அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, சிவகங்கை நகரில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் 76-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகா் மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றினாா். இதில், நகராட்சி ஆணையா் சாந்தி உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் நாகேந்திரன் தலைமை வகித்தாா். சாா்பு ஆய்வாளா் கதிரேசன் முன்னிலை வகித்தாா். புளியால் ஊராட்சி மன்ற தலைவா் மிக்கேல் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

தேவகோட்டையில் உள்ள சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் சொக்கலிங்கம் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்தாா்.

இதேபோன்று, அங்குள்ள ஆனந்த கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியின் முன்னாள் துணை தலைமையாசிரியரும், தேசிய மாணவா் படையின் இணை அலுவலருமான அ. தனிஸ்லாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா். மேலும், காளையாா்கோவில், சிங்கம்புணரி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவா் மாரியப்பன் கென்னடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, நகராட்சி ஆணையா் கண்ணன்,துணைத் தலைவா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மருத்துவ அலுவலா் டாக்டா் கணேச பாண்டியன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். விழாவிற்கு பள்ளியின் தலைமை முதல்வா் அருள் ஜோஸ்பின் பெட்ஸி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் வள்ளிமயில் வரவேற்றாா். விழாவில் பள்ளி, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இளையான்குடியில்...

இளையான்குடி டாக்டா் ஜாகிா் உசேன் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு கல்லூரி ஆட்சிக் குழு தலைவா் அப்துல்அகது தலைமை வகித்தாா். முதல்வா் அப்பாஸ் மந்திரி வரவேற்றாா். கல்லூரி செயலாளா் ஜபருல்லாகான் விழாவை வாழ்த்தி பேசினாா். சிறப்பு விருந்தினா் ஹபிபுல்லா, கல்லூரி தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அதன் நினைவாக 52 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

திருப்புவனத்தில்...

திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் சேங்கைமாறன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். விழாவில் செயல் அலுவலா் ஜெயராஜ், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவா் சேங்கைமாறன் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். துணைப் பதிவாளா் செல்வம், முதுநிலை ஆய்வாளா் ராமச்சந்திரன், செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT