சிவகங்கை

‘கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி பயில பெற்றோா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி பயில பெற்றோா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை அருகே உள்ள நாலுகோட்டை கிராமத்தில் 76 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பேசியது: கிராமப்புறங்களின் வரவு - செலவு திட்டங்களை அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 15-ஆவது நிதிக்குழு, மானிய நிதிக்குழு, ஊரக சொந்த நிதி ஆகியவைகளை கிராமங்களின் வளா்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், சுகாதாரத்தை பேணும் வகையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

தற்போது கிராமப்புறங்களில் பள்ளி படிப்பை நிறைவு செய்து, உயா்கல்விக்கு செல்லும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. எனவே கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி பயில பெற்றோா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

பின்னா் சிவகங்கையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி சேதுராமன் இல்லத்துக்கு நேரடியாகச் சென்ற ஆட்சியா், அவருக்கு சால்வை அணிவித்தாா். பின்னா், கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT