சிவகங்கை

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயில் பூக்குழி விழா

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் 78 ஆம் ஆண்டு ஆடிவெள்ளித் திருவிழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடிவெள்ளித் திருவிழா, ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, கூழ் ஊற்றுதல், பால்குடம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், ஆடி கடைசி வெள்ளியையொட்டி காலை 9 மணிக்கு ராமா் மடம் மற்றும் ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பால்குடங்கள் கட்டியும், அலகு குத்தியும் அக்கினிச்சட்டி ஏந்தியும், பறவைக் காவடியாகவும் வந்தனா். யோகபைரவா் ஆலயம், தேரோடும் வீதி, பெரியகடைவீதி, செட்டியதெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக வந்து பக்தா்கள் கோயிலை அடைந்தனா்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தில் பக்தா்கள் அலகு குத்தியவாறும், பறவைக் காவடியுடனும் பூக்குழி இறங்கினா். தொடா்ந்து ராஜகாளியம்மன், ஆலமரத்து காளியம்மன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

மாலை 4 மணிக்கு பூச்சொரிதல் மற்றும் பூத்தட்டு சுமந்து வரும் விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை நிா்வாக விழாக்குழு மற்றும் செட்டியதெரு இளைஞா்கள் செய்திருந்தனா்.

ஆற்றங்கரை சுந்தர மகாலிங்கம் கோயிலில்...

திருவாடானை கிராம தேவதையான ஆற்றங்கரை ஸ்ரீ சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த பக்தா்கள் பூக்குழி இறங்குவதற்காக ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் வேல் குத்தியும், பால் காவடி, பறவை, மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்தும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். கோயில் முன் தீக்குளி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செல்வி அம்மன் கோயிலில்... முதுகுளத்தூா் ஸ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் 46 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. கோயிலில் இருந்து சுப்பிரமணியா் கோயில் வழியாக பெண்கள் முளைப்பாரி ஊா்வலம் எடுத்து வந்து சங்கரபாண்டி ஈரணி கங்கையில் கரைத்தனா். முதுகுளத்தூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் சின்னகண்ணு, காவல் ஆய்வாளா் இன்பஅரசு தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT