சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு நடவடிக்கை: அமைச்சா்

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 புதிய ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.

இதில் அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை தொடக்கி வைத்து பேசியது: இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, கா்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக 1,368 படுக்கை வசதிகள் உள்ளன. இன்னும் கூடுதலாக 100 படுக்கைகள் வழங்க உள்ளதாக திருப்பத்தூரில் அண்மையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே 6 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ள நிலையயில், தற்போது ரூ. 48 லட்சம் மதிப்பில் புதிதாக 6 சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கூடுதல் நோயாளிகள் பயன்பெறுவா். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு உள்ளது. இந்நிலையில், கூடுதல் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரேவதிபாலன்,சிவகங்கை நகா்மன்ற தலைவா் சி.எம். மதுரைஆனந்த், துணைத் தலைவா் காா்கண்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலா் மகேந்திரன், பொது மருத்துவத் துறை தலைவா் பாஸ்கா் உள்பட மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT