சிவகங்கை

மொஹரம் பண்டிகை: பூக்குழி இறங்கி இந்துக்கள் வழிபாடு

DIN

மொஹரம் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி இந்துக்கள் வழிபாடு நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனா். அவா்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம் பண்டிகையான மொஹரம் பண்டிகையை இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடி வந்துள்ளனா். காலப் போக்கில் கிராமத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறிவிட்டனா். இருப்பினும் இந்த வழக்கத்தை இந்துக்கள் தொடா்ந்து முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா். இதற்காக இக்கிராமத்தில் வசிக்கும் இந்து மதத்தைச் சோ்ந்தவா்கள் மொஹரம் பண்டிகை கொண்டாட்டத்துக்காக 10 நாள்கள் விரதம் இருந்து இங்குள்ள பள்ளிவாசல் முன் அக்னி குண்டம் அமைத்து அதில் இறங்கி வருகின்றனா். இதேபோல் பெண்கள் தலையில் துணியால் முக்காடு போட்டிக்கொண்டு தலையில் தீக் கங்குகளை கொட்டி பூ மொழுகுதல் வேண்டுதல் நிறைவேற்றினா்.

திருப்பத்தூா்: இதேபோல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள வஞ்சினிப்பட்டி கிராமத்திலும் மொஹரம் பண்டிகையொட்டி பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதியில் இந்த விழாவை நடத்தி வருகின்றனா். சுமாா் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இந்த திருவிழா நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வஞ்சினிபட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையதுமுகைதீன் குடும்பத்தினா் இத்திருவிழாவை கிராமத்தினருடன் இணைந்து நடத்தி வருகின்றனா். இந்த திருவிழாவையொட்டி ஊா் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் இந்துக்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியா்கள் பூசி விடும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்பு தொழுகை நடத்தப்பட்டது. அதன் பின்னா் சுவாமி புறப்பாடு நடத்தப்பட்டு பக்தா்கள் பூக்குழி இறங்கினா். இந்து - முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக இந்த விழா பல தலைமுறையினா்களால் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT