சிவகங்கை

திருப்புவனம், மானாமதுரை பகுதியில் தொடர் மழை: வைகை நீரால் நிரம்பும் கண்மாய்கள்

8th Aug 2022 03:05 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை, வைகையில் வரும் தண்ணீர் சீரமைக்கப்பட்ட வைகை கால்வாய்களில் தடையின்றி செல்வதால் கண்மாய்கள், ஊரணிகளுக்கு தண்ணீர் வரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள வைகை பாசனக் கால்வாய்கள்  தூர்ந்துபோய் வைகையாற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. கடந்தமுறை சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன் முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்ந்துபோன பல கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் திருப்புவனத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமையான காலப்போக்கில் மறைந்துபோன மட்டை ஊரணியில் வாரச்சந்தை நடந்து வந்தது. 

இந்த ஊரணியை மீட்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததன்பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஊரணியை மீட்டு ரூ 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஊரணியை தூர்வாரி தெப்பக்குளமாக மாற்றி அதற்குள் மைய மண்டபம், சுற்றுச்சுவர், சிறுவர் பூங்கா, நடைபாதை  அமைக்க ஏற்பாடு செய்தார். 

இந்த தெப்பக்குளத்துக்கு வைகையாற்றிலிருந்து தண்ணீர் வரும் கால்வாயும் சீரமைக்கப்பட்டது. பொதுமக்கள் தற்போது இந்த தெப்பக்குளத்தின் நடைபாதையில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில்  மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வைகையாற்றிலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வைகை பாசனக் கால்வாய்களில் தடையின்றி தண்ணீர் செல்கிறது. மேலும் மேற்கண்ட திருப்புவனம் மட்டை ஊரணி தெப்பக்குளமும் முழுமையாக தண்ணீர்  நிரம்பி அழகாக காட்சியளிக்கிறது. 

இதையும் படிக்க:  கேரளத்தில் சிவப்பு எச்சரிக்கை:அணைகள் திறப்பு

இப்பகுதிகளிலுள்ள பல நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. மழை, வைகை தண்ணீர் வரத்தால் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளிலுள்ள குடிநீர் திட்டக் கிணறுகள், பாசனக்கிணறுகளுக்கு நீராதாரம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT