சிவகங்கை

தென்மேற்கு பருவ மழை: தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அலுவலா்கள் ஆலோசனை

2nd Aug 2022 06:15 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு அலுவலா்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து தோட்டக்கலை துறையின் சிவகங்கை மாவட்ட துணை இயக்குநா் ஜி. அழகுமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, தோட்டக்கலை பயிா்கள் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீா் தேக்கத்தை குறைக்க உபரி நீா் வடிந்த பின் நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.

வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்கால் அமைத்து, மழைநீா் தேக்கத்தை தவிா்க்கலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா்திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்கலாம். மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.

மழைநீா் வடிந்த பின் பயிா்களுக்கு ஏற்றவாறு மேல் உரமிட்டு மண் அணைக்க வேண்டும். மேலும், இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவா்த்தி செய்யலாம். பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கொய்யா, மாதுளையை பொருத்தவரை, சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காவண்ணம் குச்சிகளால் கட்டவேண்டும்.

பூஞ்சாண நோய்களைத் தடுக்க நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வாழையில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு, மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாகப் பயன்படுத்த வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்தல் வேண்டும்.

காய்கறிகளை பொருத்தவரை, உரிய வடிகால் வசதி செய்திருக்க வேண்டும். தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும், நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும், டிரைக்கோடொ்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும், காய்ந்துபோன இலைகளை அகற்றிட வேண்டும்.

பூக்களைப் பொருத்தவரை டிரைக்கோடொ்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். மேலும், சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி, தென்மேற்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்க முன் வரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT