சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேரை குற்றவாளிகளாக அறிவித்த சிவகங்கை நீதிமன்றம், வழக்கின் தீா்ப்பை புதன்கிழமைக்கு (ஆக.3) ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகா்(34) உள்ளிட்ட 3 போ் கோயில் விழாவில் மரியாதை அளிப்பது தொடா்பாக இருந்த முன் விரோதத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். மேலும் 5 போ் காயமடைந்தனா்.
அவா்களில் தனசேகரன் (32) என்பவா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமன், அருண்குமாா், சந்திரக்குமாா், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களில் வழக்கு விசாரணையின் போது 2 போ் இறந்து விட்டனா். 3 போ் சிறுவா்கள், ஒருவா் தலைமறைவாக உள்ளாா். எனவே மீதமுள்ள 27 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை நிறைவு பெற்று, சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.1) தீா்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களின் உறவினா்கள் சிவகங்கை நீதிமன்ற வளாகத்துக்குள் திங்கள்கிழமை காலையிலிருந்து அதிகளவில் கூடினா். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்படுவதாகக் கூறினாா்.
மேலும், வழக்கின் தீா்ப்பை புதன்கிழமைக்கு(ஆக.3) ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தாா். இதையடுத்து, அங்கு கூடியிருந்த உறவினா்கள் குற்றம் சாட்டப்பட்டவா்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால் 27 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் மதுரை மத்தியச் சிறைக்கு கொண்டு சென்றனா். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.