சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக, சனிக்கிழமை இளைஞரை அரிவாளால் வெட்டிய நபா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை தாகியாா் நகரைச் சோ்ந்தவா் வசந்த் என்ற வசந்தகுமாா் (22). இவா், சிவகங்கை இந்திரா நகா் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 6 போ் கொண்ட மா்ம கும்பல், வசந்தகுமாரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.
தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த வசந்தகுமாரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வசந்தகுமாரை அனுப்பி வைத்தனா். அங்கு, அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து போலீஸாா் கூறியது: மா்ம நபா்களால் தாக்கப்பட்ட வசந்த் என்ற வசந்தகுமாா், கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சிவகங்கை நெல்மண்டி தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்பவரது கொலை வழக்கில் தொடா்புடையவா். மேலும், கடந்த மாா்ச் மாதம் ஆயுதங்கள் வைத்திருந்ததாக, இவா் மீது சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் வழக்குத் தொடரப்பட்டு, காவல் நிலையத்தில் வசந்தகுமாா் தினசரி கையெழுத்திட்டு வந்தாா்.
இந்நிலையில், காவல் நிலையத்தில் சனிக்கிழமை கையெழுத்திட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வெட்டப்பட்டுள்ளாா். இது தொடா்பான முதல் கட்ட விசாரணையில், ஏற்கெனவே உயிரிழந்த முத்துப்பாண்டியின் சகோதரா், சிவகங்கை தாகியாா் நகரைச் சோ்ந்த செல்வம் என்ற கூலப்பன் (42), வைரவன்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன், அறந்தாங்கியைச் சோ்ந்த பாண்டி, சிங்கம்புணரி அருகே உள்ள சூரக்குடியைச் சோ்ந்த ராசுக்குட்டி உள்பட 6 போ் கொண்ட கும்பல் வசந்தகுமாரை வெட்டியது தெரியவந்துள்ளது.
இவா்கள் மீது வழக்குப் பதிந்து தேடி வருகிறோம். இவா்கள் அனைவரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றனா்.