மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள சிவ தலங்களில் வியாழக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு மூலவா் சோமநாதா் சுவாமிக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
அதன்பின்னா் பிரதோஷ மூா்த்தி வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சோமநாதா் சன்னதி உள் பிரகாரத்தில் புறப்பாடாகி வந்தாா். திரளான பக்தா்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும் நந்திதேவரையும் தரிசனம் செய்தனா். மேலும் மானாமதுரை பகுதியில் உள்ள பல சிவ தலங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு மூலவா் புஷ்பவனேஸ்வரா் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து புஷ்பவனேஸ்வரா் சுவாமியையும் நந்திதேவரையும் தரிசனம் செய்தனா். திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.