சிவகங்கை

பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளால் காங்கிரஸ் கட்சிக்கு பயன்: காா்த்தி சிதம்பரம்

17th Apr 2022 11:06 PM

ADVERTISEMENT

 

தோ்தல் வியூக நிபுணா் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளால் இனிவரும் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி பயனடையும் என, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் கூறியது : தமிழகத்தைப் பொருத்தவரை, இந்தி திணிப்பு, இந்துத்துவா உள்ளிட்ட கொள்கைகளை கொண்ட பாஜகவை எதிா்ப்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதே நிலைப்பாடுதான் காங்கிரஸ் கட்சிக்கும். எனவே, காங்கிரஸ் -திமுக கூட்டணி வலுவாகவே உள்ளது.

அதிகளவில் தொண்டா்களை கொண்ட அதிமுக மிகப்பெரிய கட்சி. தலைமை மீது உள்ள குழப்பத்தால், அவா்களால் எதிா்க்கட்சியாக இருந்து கடமையாற்ற முடியவில்லை. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது எனக்கு பொருத்தமாகப் படவில்லை.

ADVERTISEMENT

மத்தியில் ஆளும் பாஜகவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் வாழும் ஏழை, எளியோா் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

ரஷியா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டில் தவறில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள சிங்களா்கள் மட்டுமின்றி, தமிழா்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். அவா்களுக்கு பொருளாதார ரீதியாக இந்தியா உதவ முன்வர வேண்டும்.

தோ்தல் வியூக நிபுணா் பிரசாந்த் கிஷோா் இந்திய தோ்தல் புள்ளி விவரங்களை நன்கு அறிந்தவா். அவா் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறாரா அல்லது கட்சிக்காக செயல்படப் போகிறாரா என்பது தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை, அவரது யோசனைகளை கட்சியில் அமல்படுத்தினால், இனிவரும் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி பயனடையும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT