சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளை முட்டியதில் இளைஞா் பலியானாா்.
பூங்குன்றநாடு என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் ஆண்டுதோறும் பூங்குன்றநாயகி அம்மனுக்கு சித்ரா பௌா்ணமியையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இதையொட்டி வேலங்குடி, சுண்டக்காடு, கண்டவராயன்பட்டி, வஞ்சினிப்பட்டி, நெற்குப்பை கீழத்தெரு ஆகிய 24 கிராம மக்கள் நாட்டுப்பிள்ளையாா் கோயிலில் ஒன்றுகூடி வேட்டி, துண்டுகளை வைத்து வணங்கினா். பின்னா் பூங்குன்றநாயகி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனத்திற்கு பின்னா், ஊா்வலமாகச் சென்று குடகுமலை கோயிலை வணங்கி, அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழுவில் காளைகளுக்கு வேட்டிகளை வழங்கி மரியாதை செய்தனா். பின்னா் தொழுவிலிருந்து வாடிவாசல் வழியாக 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
முன்னதாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட காளைகள் வயல் மற்றும் கண்மாய்களில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மாடுபிடி வீரா்களும் பங்கேற்று காளைகளை அடக்கினா்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் குட்டுப்பட்டியைச் சோ்ந்த எழுவன் மகன் பூமிநாதன் (30) என்ற காளை முட்டியதில் பலத்த காயமடைந்தாா். அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.