சிவகங்கை

மானாமதுரையில் வீர அழகா் கருட வாகனத்தில் பவனி

14th Apr 2022 02:59 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சுந்தரராஜப் பெருமாள் எனும் வீர அழகா் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது.

மானாமதுரை வீர அழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாள் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தின் மண்டகப்படி நடைபெற்றது. இதையொட்டி நகராட்சி அலுவலகப் பணியாளா்கள் கோயிலுக்குச் சென்று சுந்தரராஜ பெருமாளை வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க பல்லக்கில் மண்டகப்படிக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து இரவு சுந்தரராஜப் பெருமாளுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இந் நிகழ்ச்சியில் மானாமதுரை நகராட்சித் தலைவா் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவா் பாலசுந்தரம், ஆணையா் கண்ணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பக்தா்கள் திரளாக பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனா். அதன் பின்னா் கருட வாகனத்தில் எழுந்தருளிய வீர அழகா் மானாமதுரை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து நள்ளிரவு கோயிலைச் சென்றடைந்தாா். வீதிகளில் மக்கள் பெருமாளை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT